search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை கோவில்"

    • சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.
    • மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 17-ந்தேதியில் இருந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தபடி உள்ளனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது.

    இந்தநிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந்தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது. இதையொட்டி பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் ஆயத்த பணிகளை தொடங்கி உள்ளனர்.

    தற்போது சன்னிதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் போலீஸ், சி.ஆர்.பி.எப்., வெடிகுண்டு தடுப்பு பிரிவு என பல்வேறு துறைகளை சேர்ந்த 2,150 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மண்டல பூஜையின் போது சபரிமலையில் மட்டும் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலையில் 750 பேரின் பணி நேற்றுடன் நிறைவடைந்தது. அதற்கு பதிலாக புதிய அதிகாரிகள் பொறுப்பேற்றனர். சன்னிதானம் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. ராகுல் ஆர்.நாயர் புதிய ராணுவ வீரர்களை வரவேற்றார். அவர் பேசும்போது, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலில் போலீசார் அதிக முனைப்புடன் செயல்பட வேண்டும். பக்தர்களை மிகுந்த கண்ணியத்துடன் நடத்த வேண்டும். போலீசார் உரிய நேரத்தில் பணிக்கு வருகைதர வேண்டும். தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களில் 40 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதால் போலீசாரின் பொறுப்பு அதிகரித்து வருகிறது என்றார்.

    சபரிமலையில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் 10 பிரிவுகளாக 35 இன்ஸ்பெக்டர்கள், 105 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்டோரின் மேற்பார்வையில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    சிறப்பு அதிகாரி சுதர்சனன் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு 4 ஆயிரம் பக்தர்கள் 18-ம் படி ஏறுகிறார்கள். அனைவருக்கும் சாமி தரிசனம் கிடைக்க போலீசார் முயற்சி செய்து வருகின்றனர். பக்தர்கள் போலீசாரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி அவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்" என்றார்.

    மண்டல பூஜைக்கு பின், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ந்தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும். அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி மகர சங்ரம பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    • நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.
    • பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் 80 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    ஆன்லைனில் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து சபரிமலைக்கு வந்த நிலையில், உடனடி முன்பதிவு செய்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்தார்கள். இதன் காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வருகை பல மடங்கு அதிகரித்தது.

    நிலக்கல், பம்பை, சன்னிதானம் மற்றும் மலைப்பாதைகள் அனைத்திலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டதால், சாமி தரிசனத்துக்கு பல மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

    பம்பையிலேயே பக்தர்கள் நீண்ட நேரம் காத்து நின்று மலையேறினர். மரக்கூட்டம், பதினெட்டாம் படி, சன்னிதானம் உள்ளிட்ட இடங்களில் கடும் நெரிசலும் ஏற்பட்டது. தரிசன நேரம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும், பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருந்ததால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை.

    ஆன்லைன் முன்பதிவு முறையில் ஆயிரக்கணக்கானோர் பதிவு செய்த நிலையில், உடனடி முன்பதிவு வசதியையும் பயன்படுத்தி ஏராளமானோர் வந்ததால் கூட்ட நெரிசலை தவிர்க்க முடியவில்லை. இதன் காரணமாக குழந்தைகளுடன் வந்தவர்கள், வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    ஆன்லைன் முன்பதிவு எண்ணிக்கையை ஐகோர்ட்டு உத்தரவுப்படி குறைத்தும், பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு செல்லாமலேயே திரும்பிச் சென்ற சம்பவமும் அரங்கேறியது.

    நேற்று பம்பை முதல் சன்னிதானம் வரை பல இடங்களில் பக்தர்கள் நிறுத்தி நிறுத்தி அனுப்பப்பட்டனர். இதனால் 10 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக நிலக்கல்லியேயே பக்தர்கள் அதிக நேரம் நிறுத்தப்பட்டனர்.

    சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளில் ஏற்பட்ட குளறுபடியே பக்தர்களின் அவதிக்கு முக்கியமாக காரணமாக கூறப்படுகிறது. சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு கேரள அரசு மற்றும் தேவசம் போர்டை கேரள ஐகோர்ட்டு வலியுறுத்தியது.

    அதனடிப்படையில் பல்வேறு திட்டங்களை வகுத்தபோதிலும் கூட்ட நெரிசல் ஏற்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்தநிலையில் இடுக்கியில் நடந்த நவ கேரள சதாஸ் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பங்கேற்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், சபரிமலை நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வனத்துறை மந்திரி சுசீந்திரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், கேரள டி.ஜி.பி.ஷேக் தர்வேஷ்சாகிப் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். அந்த கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-

    சபரிமலையில் கடந்த 6-ந்தேதி முதல் பக்தர்களின் எண்ணிக்கை தினசரி 88 ஆயிரமாக உயர்ந்தது. இதுதான் கூட்ட நெரிசலுக்கு காரணம். அதன்பிறகு தரிசன நேரம் 18 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. ஆன்லைன் முன்பதிவு 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டது.

    நிலக்கல்லில் நடந்துவரும் உடனடி முன்பதிவை நிறுத்தி வைக்கலாம். தேவைப்பட்டால் மட்டும் உடனடி முன்பதிவை தொடர்ந்து நடத்தலாம். பெண்கள், குழந்தைகளுக்கான தரிசனத்தில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பம்பை முதல் சன்னிதானம் வரை மலையேறும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உடனுக்குடன் கிடைக்க தேவஸ்தான தலைவர் தலைமையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் பணிகளை ஒருங்கிணைந்த முறையில் செய்ய வேண்டும். பக்தர்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேவசம்போர்டு மந்திரி ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சபரிமலைக்கு கடந்த ஆண்டைப்போல பக்தர்கள் அதிகளவில் வருகிறார்கள். மெய்நிகர் வரிசையில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தில் இருந்து 80 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. உடனடி முன்பதிவு நிறுத்தப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கைகள் கூட்ட நெரிசலை குறைக்க உதவும்.

    பக்தர்களின் யாத்திரை அமைதியாக நடந்து வருகிறது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்போது சிறுசிறு பிரச்சனைகள் எழுகின்றன. யாத்ரீகர்கள் சுய கட்டுப்பாட்டை கடைபிடிக்க தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-

    கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் சபரிமலையில் பக்தர்களை கையாளுவதில் குளறுபடிகள் ஏற்பட்டது. அந்த குறுபடிகளை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. எல்லா வருடமும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் தான்.

    கூட்டம் அதிகரிக்கும்போது அனைவருக்கும் எல்லாம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனை வரும் ஆண்டுகளில் எப்படி நிவர்த்தி செய்யவேண்டும் என்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை வழங்கவும், அவர்களது வாகனங்களை நிறுத்த போதிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    நீதிபதிகள் அனில் நரேந்திரன், கிரிஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்திருப்பதாவது:-

    சபரிமலைக்கு செல்லும் கூட்டம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வரிசை வளாகத்தில் பக்தர்களின் கூட்டத்தை அனுமதிக்க வேண்டாம். அதனை தினமும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் உள்ள என்.எஸ்.எஸ். தன்னார்வலர்களின் மூலமாக அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் உதவியுடன் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் பிஸ்கட்டுகள் வழங்க திருவிதாங்கூர் தேவசம்போர்டு பரிசீலிக்கும். குழந்தைகள் உள்ளிட்ட யாத்ரீகர்களுக்கு கோவிலில் கூடுதல் வதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • 27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும்.
    • சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    சபரிமலை:

    மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. மண்டல பூஜையின் முன்னோடியாக 26-ந் தேதி மாலையில் தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். இதற்கான தங்க அங்கி ஆரன்முளா பார்த்த சாரதி கோவிலில் இருந்து 23-ந் தேதி ஊர்வலமாக பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்படுகிறது.

    27-ந் தேதி மண்டல பூஜைக்கு பிறகு அன்று இரவு கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந் தேதி மாலையில் நடை திறக்கப்படும். பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந் தேதி நடைபெறும். அன்றைய தினம் சாமிக்கு பந்தளத்தில் இருந்து எடுத்து வரப்படும் தங்க ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து பொன்னம்பல மேட்டில் தோன்றும் மகர ஜோதியை பக்தர்கள் பார்த்து வழிபடுவார்கள்.

    இந்தநிலையில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடப்பு சீசனில் நேற்று வரை 13 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். சென்னையில், மழை காரணமாக ஏராளமான ரெயில்கள் ரத்தானது. இதனால் ஐயப்ப பக்தர்களின் சபரிமலை பயணமும் எதிர்பாராத விதமாக ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது ரெயில் போக்குவரத்து சீராகி வரும் நிலையில் தென் மாநில பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 10 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதற்கிடையே சபரிமலையில் அதிகரித்து வரும் கூட்டத்தினால் நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு கேரள ஐகோர்ட்டு சிறப்பு அமர்வு அறிவுறுத்தி உள்ளது. 

    • ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர்.
    • விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (கார்த்திகை 1-ந்தேதி) முதல் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செயய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை நிலவுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சபரிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. கனமழையை பொருட்படுத்தாமல் ஐயப்ப பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தார்கள். இன்றும் அவ்வப்போது மழை பெய்தபடி இருந்தது. இருந்தபோதிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தபடி இருந்தனர்.

    • சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டவண்ணம் உள்ளனர்.
    • இன்று சாமி தரிசனம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

    திருவனந்தபுரம்:

    மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்தமாதம் 16-ந்தேதி திறக்கப்பட்டது. மறுநாள் 17-ந்தேதி (கார்த்திகை 1) முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சாமி தரிசனம் செய்ய தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் திரண்டவண்ணம் உள்ளனர். ஆன்லைன் மூலம் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவு செய்து தரிசனம் செய்து வரும் நிலையில், உடனடி முன்பதிவு மையங்களிலும் ஏராளமானோர் பதிவு செய்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தற்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 17 மணி நேரம் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்த போதிலும் பக்தர்கள் வருகை மிகவும் அதிகமாக இருப்பதால், சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை நிலவி வருகிறது.

    நேற்று சாமி தரிசனத்துக்கு 89 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்திருந்த நிலையில், 70 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) சாமி தரிசனம் செய்ய 60 ஆயிரம் பேர் முன்பதிவு செய்திருக்கிறார்கள்.

    சாமி தரிசனத்துக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடனடி முன்பதிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் செய்யப்பட்டு இருக்கிறது. பக்தர்கள் வருகை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், அவர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய தேவசம்போர்டு பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

    அதன்படி திருப்பதி கோவிலை போன்று சபரிமலையில் வரிசை முறையை பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த முறை சோதனை முறையில் செயல்படுத்தி பார்க்கப்பட்டது. அதன்படி மரக்கூட்டம் மற்றும் சரம்குத்தி இடையே மூன்று வரிசை வளாகங்கள் பயன்படுத்தப்பட்டன.

    அந்த வரிசைகளில் பக்தர்கள் வரிசையாக ஒழுங்குபடுத்தி நிறுத்தப்பட்டனர். பின்பு அந்த வரிசைகளின்படி பக்தர்கள் வருவதற்கான உத்தரவு சன்னிதானத்தில் இருந்து போலீசார் மூலம் பிறப்பிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த வழிகள் திறக்கப்பட்டு பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்பட்ட னர்.

    இந்த வரிசை முறை வெற்றி பெற்றுள்ளதாகவும், பக்தர்கள் கூட்டம் மிகவும் அதிகமாக உள்ள நாட்கள் மற்றும் நேரங்களில் இந்தமுறை அமல்படுத்தப்படும் என்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வரிசை முறையால் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் காத்திருக்கும் நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சபரிமலைக்கு தனி முத்திரை வழங்கப்பட்டு உள்ளது.
    • ஐயப்பன் பெயரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள் கடிதங்கள் வாயிலாக ஐயப்பனிடம் முறையிடுகிறார்கள்.

    சபரிமலை:

    இந்தியாவிலேயே ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் செயல்படும் தபால் அலுவலகம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ளது. சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைப்புரம் கோவில் அருகே இந்த தபால் நிலையம் செயல்படுகிறது.

    இந்த தபால் நிலையம் 1963-ம் ஆண்டு மண்டல பூஜை காலமான நவம்பர் 16-ந்தேதி திறக்கப்பட்டது. இந்த தபால் நிலையம் மண்டல மற்றும் மகர விளக்கு காலங்களில் மட்டும் செயல்படுகிறது.

    தபால் அலுவலகங்களில் ஒரே மாதிரியான முத்திரை தான் பயன்படுத்தப்படும். ஆனால் சபரிமலைக்கு தனி முத்திரை வழங்கப்பட்டு உள்ளது. அதே போல் தனி பின்கோடு எண்ணும் கொடுக்கப்பட்டு உள்ளது. 689713.

    சரி, இந்த தபால் நிலையத்துக்கு வரும் கடிதங்கள் எந்தெந்த பகுதிகளில் டெலிவரி செய்யப்படும்? அதற்கான தேவையே இல்லை. ஒரே ஒருவர் பெயருக்குத்தான் அத்தனை கடிதங்களும் வருகின்றன.

    அதாவது ஐயப்பன் பெயரில் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க முடியாதவர்கள் கடிதங்கள் வாயிலாக ஐயப்பனிடம் முறையிடுகிறார்கள். காணிக்கைகளை மணியார்டர் மூலம் அனுப்புகிறார்கள். இந்த தபால்களும், மணியார்டர் பணமும் ஐயப்பன் சன்னதியில் வைத்து பூஜிக்கப்பட்டு தபால் நிலையத்தில் ஒப்படைக்கப்படும்.

    மேலும் சபரிமலை பிரசாதங்கள் இந்த தபால் நிலையம் மூலம் அனுப்பப்படுகிறது. தனித்துவ மிக்க சபரிமலை தபால் நிலைய முத்திரை தங்கள் வீடு தேடி வருவதை புனிதமாக கருதுகிறார்கள்.

    ஐயப்பன் முத்திரையுடன் கூடிய அஞ்சல் அட்டைகள், இன்லேன்ட் லெட்டர்கள் ஆகியவற்றையும் சபரிமலை யாத்திரை நினைவாக பக்தர்கள் வாங்கி செல்கிறார்கள். மகர விளக்கு பூஜைக்கு பிறகு இந்த தபால் நிலையம் மூடப்பட்டு விடும். முத்திரைகள் பம்பாவில் தனி அறையில் வைத்து பூட்டி பத்திரமாக பாதுகாக்கப்படும்.

    • மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது.
    • 18-ம் படிக்கு கீழ் பகுதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    சபரிமலை:

    மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று கார்த்திகை 1-ந்தேதி முதல் வழக்கமான சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு புதிய மேல்சாந்தி பி.என்.மகேஷ் நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் பகுதியில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் நெய்யபிஷேகம் நடத்தி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

    முன்னதாக கேரள தேவஸ்தான துறை மந்திரி ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். பின்னர், தேவஸ்தான விருந்தினர் மாளிகையில் மந்திரி தலைமையில் உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பின் மந்திரி ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மண்டல, மகர விளக்கு சீசனுக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் மனநிறைவுடன் பயன்பெறும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து உள்கட்டமைப்பு வசதிகள் உடனுக்குடன் செய்து முடிக்கப்படும். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அதை உடனடியாக கண்டறிந்து சரி செய்யப்படும். பாதுகாப்பு நடவடிக்கைகள் திருப்திகரமாக உள்ளதா என்பது உறுதி செய்யப்படும்.

    சன்னிதானத்தில் தற்போது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க 21 லட்சம் டின் அரவணை, 3.25 லட்சம் அப்பம் பாக்கெட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட கூடுதலாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
    • குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

    சென்னை:

    அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு ஆகிய திருவிழாக்களின்போது, தமிழகத்தில் இருந்து ஐயப்ப பக்தர்கள் சென்று வர ஏதுவாக, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், இந்த ஆண்டும் நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் புதுச்சேரி, கடலூர் ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு, அதிநவீன சொகுசு மிதவை பஸ்கள் (யூ.டி.) மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள (என்.எஸ்.எஸ்.) சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.

    சென்னை மற்றும் இதர இடங்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி பெறப்பட்டு சிறப்பான முறையில் பஸ்களை இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குழுவாக செல்லும் பக்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பஸ் வசதி செய்து தரப்படும்.

    30 நாட்களுக்கு முன்னதாக இச்சிறப்பு பஸ்களுக்கு ஆன்-லைன் மூலமாக, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூர்வ செயலி (ஆப்) ஆகியவற்றின் மூலம் முன்பதிவு செய்துகொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பஸ்களின் விவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களுக்கு 9445014452, 9445014424, 9445014463 மற்றும் 9445014416 ஆகிய செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

    சபரிமலை தேவஸ்தானம் அறிவிப்பின்படி 27.12.2023 முதல் 30.12.2023 மாலை 5.00 மணி வரை கோவில் நடை சாத்தப்படுவதால் 26.12.2023 முதல் 29.12.2023 வரை இச்சிறப்புப் பஸ்கள் இயக்கப்படமாட்டாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகளவில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டன.
    • இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை அடுத்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்குகிறது. இதனால் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் தேவசம் போர்டு தீவிரமாக செய்து வருகிறது.

    இந்நிலையில் கடந்த மகர விளக்கு பூஜை சீசனின்போது அரவணையில் அதிக அளவு பூச்சி மருந்து இருப்பதாக அரசு அறிக்கை வெளியிட்டதால், ஐகோர்ட்டு உத்தரவுப்படி கடந்த ஜனவரி மாதம் அரவணை உற்பத்தி நிறுத்தப்பட்டது. மேலும் அதிகளவில் பூச்சி மருந்து கலந்திருப்பதாக கூறப்பட்ட 6.65 லட்சம் அரவணை டின்கள் தனியாக வைக்கப்பட்டன.

    பின்பு உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட சோதனையில் ஏலக்காய் அடிப்படையிலான அரவணை சாப்பிடுவதற்கு பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அரவணை தயாரிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் பயன்படுத்தாவிடில் அது உண்ண முடியாததாக ஆகிவிடும். ஆகவே 6.65 லட்சம் டின்கள் அரவணையை பயன்படுத்த முடியாததாகியது. அவை அனைத்தும் அரவணை டின்கள் வைக்கப்படும் குடோனில் தனியாக வைக்கப்பட்டன.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை சீசன் அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது. அதற்காக அரவணை பிரசாதம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. புதிய அரவணை டின்களை வைக்க வேண்டும் என்றால் ஏற்கனவே பயன்படுத்தாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்தியாக வேண்டும்.

    ஆகவே பயன்படுத்தப்படாமல் உள்ள 6.65 லட்சம் அரவணை டின்களை அப்புறப்படுத்த உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தேவசம்போர்டு அனுமதி கோரியுள்ளது. விரைவில் அந்த மனு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.
    • தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை தொடங்க இன்னும் ஒரு மாதமே இருக்கிறது.

    இதனால் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலத்தில் வேன், பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களில் சபரிமலைக்கு வருவார்கள்.

    பஸ்கள் மற்றும் வேன்களில் வரக்கூடிய பக்தர்களில் பலர், தங்களது வாகனங்களை அலங்கார விளக்குகள், தோரணங்கள் உள்ளிட்டவைகளால் அலங்கரித்திருப்பார்கள். அதுபோன்று வரக்கூடிய வாகனங்களால் விபத்து ஏற்படுவதாக ஏராளமான புகார்கள் வந்தன.

    ஆகவே சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள், தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்ய கேரள ஐகோர்ட் ஏற்கனவே தடை விதித்துள்ளது. இருந்த போதிலும் தடையை மீறி ஏராளமானோர் தங்களது வாகனங்களை அலங்காரம் செய்துகொண்டு வருவதாக கேரள ஐகோர்ட்டில் புகார் கூறப்பட்டது.

    இதையடுத்து பக்தர்கள் தங்களது வாகனங்களில் அலங்காரம் செய்து வரக்கூடாது என்றும், அதனை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேரள ஐகோர்ட் மீண்டும் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

    • ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
    • கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மேலும் மாதந்தோறும் நடத்தப்படும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்நிலையில் ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று (17-ந்தேதி) மாலை திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்தார். வருகிற 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    பக்தர்கள் இன்று முதல் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கணபதி ஹோமம், உஷ பூஜை, புஷ்பாபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது. சாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்களே அனுமதிக்கப்பட்டார்கள்.

    பக்தர்கள் உடனடியாக முன்பதிவு செய்து கொள்ளும் வகையில் நிலக்கல் மற்றும் பம்பையில் முன்பதிவு மையங்கள் செயல்படுகின்றன. அங்கும் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

    சபரிமலை ஐயப்பன் மற்றும் மாளிகைபுரம் கோவில்களுக்கான மேல் சாந்திகள் ஆண்டுக்கு ஒரு முறை புதிதாக தேர்வு செய்யப்படுவார்கள். அடுத்த ஒரு வருடத்துக்கான புதிய மேல்சாந்திகள் தேர்வு இன்று (18-ந்தேதி) நடைபெற்றது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 17 பேரும், மாளிகைபுரம் கோவிலுக்கு 12 பேரும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் ஐயப்பன் கோவில் மற்றும் மாளிகைபுரம் கோவிலுக்கு தலா ஒருவர் குலுக்கல் முறையில் மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டனர்.

    சபரிமலையின் புதிய மேல்சாந்தியாக மூவாற்றுப்புழா ஏனநல்லூரை சேர்ந்த பி.என். மகேஷ் தேர்வு செய்யப்பட்டார். மாளிகைபுரம் மேல்சாந்தியாக பி.ஜி.முரளி தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனை குழந்தைகள் வைதே மற்றும் நிருபமா வர்மா ஆகியோர் மேல் சாந்திகள் தேர்வு சீட்டுகளை எடுத்து கொடுத்தனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட மேல்சாந்திகள் இருவரும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

    • கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.
    • மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்படும்.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும் நடை திறக்கப்பட்டு, பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவிலில் 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றி தீபாராதனை காட்டுகிறார். 18-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும்.

    18-ந் தேதி காலை 8 மணியளவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு, மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி முன்னிலையில், 2023-24-ம் ஆண்டுக்கான சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந் தெடுக்கப்படுவார்கள். சபரிமலை ஐயப்பன் கோவில், மாளிகப்புரம் கோவில் ஆகியவற்றிற்கு ஏற்கனவே நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள், குலுக்கல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

    இவர்கள் இந்த ஆண்டின் மண்டல சீசன் முதல் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓராண்டு காலத்திற்கு மேல்சாந்திகளாக பணியாற்றுவார்கள்.

    ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு 18-ந் தேதி அதிகாலை முதல் 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுடன் 22-ந் தேதி அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு, இரவு 10 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.

    ஐப்பசி மாத பூஜையையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசின் சிறப்பு பஸ்கள் சபரிமலைக்கு இயக்கப்படும். அதே போல், ஆன்லைன் முன்பதிவு அடிப்படையிலேயே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல் பகுதியில் தற்காலிக முன்பதிவு மையம் 17-ந் தேதி முதல் செயல்படும்.

    நடப்பு ஆண்டின் மண்டல, மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற நவம்பர் மாதம் 16-ந்தேதி நடை திறக்கப்படும். 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி மண்டல பூஜையும், 2024-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்து உள்ளது.

    ×